உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி மாற்றுத்திறனாளி மாணவர்கள் மனு
சென்னை, சேலம் மாவட்டத்தில் செயல்படும், பார்வை குறைபாடு உடையோருக்கான, அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி, பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன், நேற்று சென்னையில் மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனர் லட்சுமியை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து, அப்பள்ளி ஆசிரியர் கருப்பையா கூறியதாவது:
சேலம் மாவட்டம், செவ்வாய் பேட்டையில், பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான, அரசு நடுநிலைப் பள்ளி, கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த, பார்வை குறைபாடுடைய மாணவர்கள், இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
பள்ளி துவக்கி, 75 ஆண்டுகள் ஆகியும், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை. பத்து ஆண்டுகளாக போராடியும் பலனில்லை. இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், மேற்கொண்டு படிக்க, தஞ்சை, சென்னை, திருச்சி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. பெற்றோர் பலரும் துாரம் என்பதால், தங்கள் குழந்தைகளை அங்கு செல்ல அனுமதிப்பதில்லை. இதனால், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள், இடை நிற்றல் அதிகரித்து உள்ளது.
நடப்பாண்டு 16 மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடித்துள்ளனர். ஐந்து பேரின் பெற்றோர், ஒன்பதாம் வகுப்பு படிக்க, வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப மாட்டோம் என்கின்றனர். எனவே, தமிழக அரசு இடைநிற்றலை கருத்தில் வைத்து, சேலம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் உள்ள, மூன்று நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும் என, மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, மாணவர் மணிவாசகம் கூறுகையில்,''நடப்பாண்டு எட்டாம் வகுப்பு முடித்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்க, வெளி மாவட்டத்திற்கு அனுப்ப, குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். நான் ஒன்பதாம் வகுப்பு படிப்பது, அரசின் கையில் தான் உள்ளது'', என்றார்.
மேலும்
-
முதுகுளத்துார், கமுதியில் காற்றுடன் பலத்த மழை
-
சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ., போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
-
மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
-
ராமேஸ்வரம் இ சேவை மையத்தில் தடாலடி வசூலால் மக்கள் பாதிப்பு
-
மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
-
பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்