நீரஜ் சோப்ராவுக்கு ராணுவ கவுரவம் * 'லெப்டினன்ட் கர்னலாக' நியமனம்

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னலாக' நீரஜ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டார்.
இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26. கடந்த 2021ல் டோக்கியோவில் அசத்திய இவர், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் (2023, புடாபெஸ்ட்) தங்கம் கைப்பற்றினார்.
அடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.
கடந்த 2016ல் புனேயில் உள்ள இந்திய ராணுவத்தின் 'மிஷன் ஒலிம்பிக்' பிரிவு சார்பில் நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டார். பின் இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2018ல் 'சுபேதாராக' பதவி உயர்வு பெற்ற நீரஜ் சோப்ரா, பின் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார்.
தற்போது ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னல்' ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வார இதழில் வெளியிடப்பட்டது. இது கடந்த ஏப்ரல் 16 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து தொடரில்...
'நீரஜ் சோப்ரா கிளாசிக்' ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் மே 24ல் நடக்க இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக இதனை ஒத்திவைத்தார் நீரஜ் சோப்ரா. தற்போது மே 23ல் போலந்தில் நடக்கவுள்ள 71வது ஆர்லன் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

Advertisement