வெறும் 23 நிமிடங்கள் தான்... சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா!

புதுடில்லி: போரின் போது, சீனா உதவியுடன் பாகிஸ்தான் அமைத்த வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை முடக்கி, இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது இந்தியாவின் தொழில்நுட்ப பலத்தை வெளிக்காட்டியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை கடந்த வாரம் இந்தியா நடத்தியது. இதில், பயங்கரவாதிகளை கொன்று குவித்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலை சாதுர்யமாக எதிர்கொண்டது.
மேலும், பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பை உடைத்து விட்டு, பாகிஸ்தானின் விமானப் படை தளத்தின் மீதும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை சார்பில் விளக்கமுமம் அளிக்கப்பட்டது.
தற்போது, பாகிஸ்தானின் இந்த வான் பாதுகாப்பை இந்திய விமானப்படை தகர்த்தது குறித்த புது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சீனா உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த வான் பாதுகாப்பை, இந்திய விமானப் படையினர் முடக்கி விட்டு, எல்லை தாண்டிச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், லாகூர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பாக்., வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா தாக்கி அழித்தது. இதன்மூலம், இந்தியாவின் தொழில்நுட்ப பலத்தை காட்டும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.
பொதுவாக வான் பாதுகாப்பு அமைப்புகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் உதவியுடன் வான்வழி அச்சுறுத்தல்களை கண்டறிந்து, கண்காணித்து, அழிக்கும் பணிகளை மேற்கொள்ளும். ஆனால், சீனாவை முழுக்க முழுக்க நம்பிய பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக இந்த சம்பவம் அமைந்து விட்டது.



