க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டியில் அரை குறையாக 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணி

கம்பம்:மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ் க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டியில் குடிநீர் திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு 'ஜல்ஜீவன்' என்ற பெயரிலும், பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு அம்ரூத் 2.0. என்ற பெயரிலும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொகை, ஏற்கனவே வழங்கும் குடிநீர், வரும் 20 ஆண்டுகளுக்கு எவ்வளவு தேவை என கணக்கீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையத்திற்கு ரூ.29.64 கோடியும், க.புதுப்பட்டிக்கு ரூ.14.86 கோடியும், அனுமந்தன்பட்டிக்கு ரூ. 10.39 கோடியும் இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மூன்று பேரூராட்சிகளில் உத்தமபாளையத்தில் ஏற்கெனவே துவக்கிய பணிகள் இழுபறியில் உள்ளது.

க.புதுப்பட்டி அனுமந்தன்பட்டி பேரூராட்சிகளிலும் பணிகள் பாதி கிணறு தாண்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் நடப்பது போன்றே தெரியவில்லை.

திட்ட பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர்களும், தலைவர்களும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

க.புதுப்பட்டியில் முல்லையாற்றில் பம்பிங் செய்து கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி மற்றும் புதுப்பட்டியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement