வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களை நீக்கம் செய்ய அறிவுறுத்தல்

தேனி: தேர்தல் ஆணையம் சார்பில் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் தங்களின் பகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி வழங்காததால் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் பெரியகுளம்(தனி), போடி, ஆண்டிபட்டி, கம்பம் என 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 1226 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள் சார்பில் முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஓட்டுச்சாவடி முகவர் நிலை 2 என தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியல் சரிபார்த்து இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்து 100 சதவீதம் தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க உதவ வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட ஓரிரு மாநில கட்சிகள் மட்டுமே ஓட்டுச்சாவடி வாரியாக ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்து அவர்கள் பற்றிய விபரங்களை மாவட்ட தேர்தல் பிரிவிற்கு வழங்கி உள்ளனர்.

மற்ற சில கட்சிகள் ஓட்டுச்சாவடி வாரியாக ஏஜன்ட்டுகளை நியமிக்க வில்லை. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளிடம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பிற்கான ஓட்டுச்சாவடி முகவர்கள் பட்டியல் கோரினால், ஏதாவது சாக்கு போக்கு கூறி சமாளிக்கின்றனர். இதற்கு காரணம் பல கட்சிகள் ஓட்டுச்சாவடி வாரியாக ஏஜன்ட்டுகளை நியமிக்க முடியவில்லை. இதனால் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, பட்டியல் தயாரிப்பதில் சிரமமும், காலதாமதமும் ஏற்படுகிறது.

அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியும் அரசியல் கட்சிகள் பட்டியல் சரிபார்ப்பில் காலதாமதம் செய்வதால், தேர்தல் பணிகளில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அரசியல் கட்சிகளின் மாவட்டச்செயலாளர்கள் இதில் தீவிர கவனம் செலுத்தி, இறந்தவர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்க உதவ வேண்டும்', என்றனர்.

Advertisement