தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு

5

தமிழகத்தில் கடந்த நான்கரை மாதங்களில், 2.16 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் இறந்துள்ளனர். பாம்பு கடித்து 14 பேர் இறந்துள்ளனர்.

மாநிலம் முழுதும், தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள், 20 லட்சம் வரை இருக்கலாம். மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதுடன், கருத்தடை செய்யப்படுகிறது.

ஊரக உள்ளாட்சிகளில், தெருநாய்களை கட்டுப்படுத்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இதனால், தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து, மனிதர்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளன. கடந்த 2024ம் ஆண்டில், 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 43 பேர் உயிரிழந்தனர். பாம்புக்கடியால், 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 15 பேர் இறந்தனர்.

இந்த ஆண்டு, நான்கரை மாதங்களில், 2.16 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். அவர்களில் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டு, 12 பேர் இறந்துள்ளனர். பாம்புக்கடியால், 4,991 பேர் பாதிக்கப்பட்டு, 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாம்புக் கடிக்கான ஏ.எஸ்.வி, மருந்து, நாய்க்கடிக்கான ஏ.ஆர்.வி., மருந்து, போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

சிலர் நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தால், மருத்துவ சிகிச்சை பெறுவதை தவிர்க்கின்றனர். அவை, ரேபீஸ் நோயை ஏற்படுத்தி விடுகின்றன. ஆரம்ப நிலையிலேயே மருந்துகள் எடுத்துக் கொண்டால், ரேபீஸ் நோய் வராமல் தடுக்க முடியும்.

பாம்புக் கடியை பொறுத்தவரை, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால், உயிரை காப்பாற்ற முடியும். இந்த ஆண்டு நாய் மற்றும் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டோர், உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றதால், பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement