'கிராண்ட் மாஸ்டர்' தமிழகத்தின் ஸ்ரீஹரி

அல் ஐன்: தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீஹரி, இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் நடந்தது. இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன், ஸ்ரீஹரி மோதினர். இனியன், 28வது நகர்த்தலில் வென்றார். தமிழகத்தை சேர்ந்த கல்லுாரி மாணவரான ஸ்ரீஹரி 19, இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டராக தேர்வானார். கடைசியாக, கடந்த ஆண்டு மே 12ல் ஷியாம் நிகில், இந்தியாவின் 85வது கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றிருந்தார்.

கடந்த 2023ல் நடந்த புடாபெஸ்ட், கத்தார் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்ற ஸ்ரீஹரி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதலிரண்டு அந்தஸ்தை பெற்றார். கடந்த ஆண்டு மே மாதம் துபாய் ஓபனில் விளையாடிய இவர், 2500 'எலோ ரேட்டிங்' புள்ளி பெற்றார். அதன்பின் 12 மாதங்களாக, 9 தொடரில் விளையாடிய இவரால், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான கடைசி அந்தஸ்தை பெற முடியாமல் தவித்தார். தற்போது ஆசிய தொடரில் சிறப்பாக விளையாடிய இவர், இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
இதுகுறித்து ஸ்ரீஹரி கூறுகையில், ''நீண்ட போராட்டத்திற்கு பின், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றது நிம்மதி அளித்துள்ளது,'' என்றார்.

Advertisement