ஜெயலலிதாவின் வெற்றி வியூகத்தை கையிலெடுக்கும் அமித் ஷா - ஸ்டாலின்

கடந்த 2011, 2016 சட்டசபை தேர்தல்களில் ஜெயலலிதாவின் வியூகத்தை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் செயல்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதல்வர் ஸ்டாலினும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
'வரும் சட்டசபை தேர்தலில் வென்று, எப்படியாவது ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும்' என ஸ்டாலினும், 'எதை செய்தாவது, தி.மு.க., ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும்' என்று அமித் ஷாவும், அரசியல் அரங்கில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
மிகப்பெரிய வெற்றி
கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க.,வை தோற்கடிக்க முடியாது என்ற எண்ணமே, பலரிடம் இருந்தது. அ.தி.மு.க.,விடம் கூட்டணி வலிமையும் இல்லை. 2009 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., திடீரென தி.மு.க., கூட்டணியில் இணைந்தது.
அதேபோல, 2026 சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, அ.தி.மு.க., கூட்டணியை உறுதி செய்துள்ள அமித் ஷா, 2011ல் தே.மு.தி.க., போல, இப்போது 8 சதவீத ஓட்டுகளை உறுதி செய்துள்ள நாம் தமிழர் கட்சி அல்லது விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இப்படியொரு கூட்டணி அமைந்தால், 2011 போல தி.மு.க.,வை வீழ்த்தி விடலாம் அல்லது தி.மு.க., பெரும்பான்மை பெறுவதை தடுத்து விடலாம் என்பது அமித் ஷாவின் கணக்கு என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதா வழியில்
தமிழக அரசியலில் இதுவரை யாரும் எடுக்காத முடிவை, 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா எடுத்தார். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளர்களை நிறுத்தி வென்று காட்டினார்.
இத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி தவிர, தே.மு.தி.க., - ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி., - த.மா.கா., ஆகிய கட்சிகள் இணைந்து, 'மக்கள் நலக் கூட்டணி' என்ற பெயரில், புதிய கூட்டணியை உருவாக்கின.
இக்கூட்டணி தோல்வி அடைந்தது. ஆனாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து, ஒரு சதவீத ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க.,வே ஆட்சிக்கு வந்தது.
மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியதே ஜெயலலிதாதான் என்றும், அக்கூட்டணி தி.மு.க., கூட்டணி ஓட்டுகளை பிரிப்பதால், தான் தனித்து நின்றே வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கிட்டே, அப்போது அதை ஜெயலலிதா செய்தார் என பேசப்பட்டது.
அதனால், அப்போதைய ஜெயலலிதா வழியில், 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியை போல, ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக களம் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்கள் நலக் கூட்டணி
த.வெ.க., தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், அவர்களுடன் சில கட்சிகள் இணையும்போது, இயல்பாகவே 2026ன், மக்கள் நலக் கூட்டணியாக அது இருக்கும் என தி.மு.க., நினைக்கிறது.
அ.தி.மு.க., கூட்டணி இல்லையென்றால், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி, தினகரனின் அ.ம.மு.க., மற்றும் சில முஸ்லிம் கட்சிகள், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என, தி.மு.க., நம்புகிறது.
அதற்கான முயற்சிகளையும் திரைமறைவில் மேற்கொள்ள தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில். தமிழக அரசியல் அரங்கில், அதற்கான காட்சிகள் அரங்கேறும் என, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
-நமது நிருபர்--

மேலும்
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு