பதற்றத்தை தணிக்க நடவடிக்கை; இந்தியா- பாக்., முடிவு

புதுடில்லி: இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடர இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்போவதாக கூறி பாகிஸ்தான் ராணுவம், நமது அப்பாவி மக்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்தது.
இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ராணுவ டி.ஜி.எம்.ஓ., நமது ராணுவ டி.ஜி.எம்.ஓ.,விடம் கெஞ்சியதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதன் பிறகு கடந்த 10 ம் தேதி இரு நாட்டு டி.ஜி.எம்.ஓ.,க்களும் ஹாட்லைன் மூலம் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 10 ம் தேதி இரு நாட்டு டி.ஜி.எம்.ஓ.,க்கள் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடர இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இது குறித்து சூழ்நிலை மாற்றத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


