'அமித் ஷா அழைக்காதது வருத்தம் அளிக்கிறது' : முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

6

சென்னை: ''கூட்டணி குறித்து தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்வோம்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களாக சென்னையில் நடந்த, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின், அவர் அளித்த பேட்டி:

வரும் சட்டசபை தேர்தலில், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக, மாவட்டச் செயலர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தோம். அடுத்த, 15 நாட்களில், 38 மாவட்டங்களிலும் கூட்டத்தை கூட்டி, நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கருத்துகளை கேட்டு, எங்கள் முடிவை அறிவிப்போம்.

கடந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் போட்டியிட்டோம். எங்களைப் பொறுத்தவரை, இன்றுவரை அக்கூட்டணியில்தான் இருக்கிறோம். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தற்காலிகமாகத்தான் இரட்டை இலை சின்னம் தரப்பட்டது.

இந்நிலை தொடர்ந்ததால், கடந்த லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டேன். என்னை தோற்கடிக்க நடந்த சூழ்ச்சிகளை எல்லாம் மீறி, 33 சதவீதம் அதாவது 3.42 லட்சம் ஓட்டுகள் பெற்றேன். இது எங்களின் நியாயங்களுக்கு கிடைத்த வெற்றி.

மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது, எங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது. அவரை சந்திக்க நேரம் கேட்கவில்லை. மறைமுகமாக யாரிடமும் பேச்சு நடத்தவில்லை. தே.ஜ., கூட்டணியில், 9 கட்சிகள் உள்ளன. பழனிசாமி தவிர, மற்ற அனைத்து தலைவர்களும் எங்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

தே.ஜ., கூட்டணிக்கு யார் தலைமை என்பதை பேசிதான் முடிவெடுக்க முடியும். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர். கூட்டணி தொடர்பாக அவருடன் பேசுவேன். அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பது, எங்கள் நிலைப்பாடு. அப்படி இணையும்போது யார் தலைமை என்பதெல்லாம் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்க்கு

பாராட்டு''அன்பு சகோதரர் விஜய், அரசியல் கட்சி துவங்கியபோதே வரவேற்றேன். அவரது இலக்கு, எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அரசியல் செயல்பாடுகளை பார்த்துதான் சொல்ல முடியும் என்று சொல்லியிருந்தேன். ''நல்ல இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவர் அடுத்து எப்படி செயல்படுகிறார் என்பதையும் கவனிக்கிறேன்,'' என்றார் பன்னீர்செல்வம்.

Advertisement