மின் துறையில் ஜெ.இ., பணியிடம் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மின் துறையின் இளநிலை பொறியாளர் பணியிட வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி மின் துறையில் காலியாக உள்ள 73 மின் பொறியாளர் (எலெக்ட்ரீக்கல்) கடந்த மார்ச் 12ம் முதல் 31ம் தேதி வரை பெறப்பட்டது. இப்பணியிடங்கள் பொது-30, ஓ.பி.சி.,-8, எம்.பி.சி.,-13, மீனவர்-1, முஸ்லீம்-1, எஸ்.சி.,-12, எஸ்.டி.,-1, இ.டபுள்யூ.எஸ்.,-1 என்ற அடிப்படையில் நிரப்பப்படும். இதில், 3 இடங்கள் மாற்றுக்திறனாளிக்கு உள் ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக புதுச்சேரி மின்துறையில் பணியிடங்கள் நிரப்பாத நிலையில், வயது தளர்வு கோரிய வழக்கை, மத்திய தீர்ப்பாயம் ஏற்க மறுத்து உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து முதலியார்பேட்டையை சேர்ந்த கீதா சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நேற்று விடுமுறை அமர்வு நீதிபதிகள் லட்சுமிநாராயணன், சுவாமிநாதன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கடந்த 20 ஆண்டுகளாக புதுச்சேரி மின் துறையில் பொறியாளர் பணிக்கு தேர்வு நடத்தவில்லை. கடந்த 2020, 2022ம் ஆண்டுகளில் அறிவித்த தேர்வையும் அட்டவணைப்படி நடத்தவில்லை. எனவே வயதினை காட்டி தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு எழுத மறுப்பது சட்ட விரோதமானது. பணி நியமன விதிகளுக்கும் எதிரானது.

வயது தளர்வினை அளிக்க கூடிய அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு என்று மூத்த வக்கீல் ஞானசம்பந்தன் முன் வைத்தார். அரசு வழக்கறிஞர் மத்திய தீர்ப்பாயம் வயது தளர்வு அளிக்க மறுத்ததையும் எடுத்துரைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இவ்வழக்கின் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளதால், வழக்கை ஜூன் 2ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக ஒத்தி வைத்தார்.

மின்துறை பொறியாளர் பணிக்கான தேர்வு கடந்த 11ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக ஜூன் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி உத்தரவு வரும் 2ம் தேதி பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால், போட்டி தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement