சூலுார் விமானப்படைத் தளத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது

சூலுார் : சூலுார் விமானப்படைத்தளத்துக்குள் புகுந்த வாலிபரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், சூலுாரில் விமானப்படைத் தளம் உள்ளது. இங்கு, தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்கள், மீட்பு ஹெலிகாப்டர்கள் உள்ளன. விமானப்படைத்தள பாதுகாப்பு பிரிவினரின் இரண்டு அடுக்கு பாதுகாப்பில் இத்தளம் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தளத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறிய வாலிபர், உள்ளே குதித்துள்ளார். கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வீரர்கள், உடனடியாக அந்நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பல மணி நேரம் விசாரணைக்குப் பின், நேற்று சூலுார் போலீசாரிடம், அந்நபரை ஒப்படைத்து புகார் அளித்தனர். சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அந்நபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தீப்,27 என்பது தெரிந்தது. முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அந்நபரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதற்காக விமானப்படைத் தளத்துக்குள் சென்றார், உறவினர்கள், நண்பர்கள் யாராவது சூலுார் பகுதியில் உள்ளனரா என விசாரித்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு உள்ள விமானப்படைத்தளத்துக்குள் வாலிபர் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement