மது அருந்தும் இடமாக மாறிய காலி இடம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், யாகசாலை மண்டபம் பின்தெருவில், சுற்றியுள்ள பகுதியில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மின்மாற்றியை தாங்கி பிடிக்கும் மின்கம்பங்கள் அமைந்துள்ள காலி இடத்தை, சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தும் மையமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மது அருந்தியதும், குடிபோதையில் காலி பாட்டில்களை சாலையில் உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால், நடந்து செல்வோரின் கால்களை கண்ணாடி துகள் பதம் பார்த்து விடுகின்றன.

மேலும், 'குடி'மகன்கள் சாலையோரம் அமர்ந்து மது அருந்துவதால், பணி முடிந்து இரவு வீடு திரும்பும் பெண்களும், டியூஷன் முடிந்து, வீடு திரும்பும் பள்ளி, கல்லுாரி மாணவியரும் அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே, மின்மாற்றியின் அருகில் சமூக விரோதிகள் மது அருந்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மின்மாற்றி மின்கம்பம் அமைந்துள்ள பகுதியில் மின்வாரியத்தினர் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement