கூடுதல் மாணவர்கள் சேர வாய்ப்பு திருத்தணி அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள்

திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது.

திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் இளங்கலையில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்; பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்; பி.காம்., கணக்குப்பதவியில், வணிகவியல் உள்பட மொத்தம், 11 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தன.

அதே போல், முதுகலை பட்டப்படிப்பில், எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், எம்.காம்., பொது, கணக்குப்பதிவியில், வணிகவியல், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளும், பி.எச்.டி., யில், வரலாறு, பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.

இளங்கலை பாடப்பிரிவுகளில் ஆண்டுதோறும், 686 மாணவ-மாணவியர் புதியதாக சேர்க்கப்படுவர். கல்லுாரியில் சேருவதற்கு, திருத்தணி, திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் பகுதியில் இருந்து, 3, 000 மாணவர்கள் விண்ணப்பம் செய்கின்றனர்.

இதில் வெறும், 686 மாணவர்களுக்கு மட்டுமே சீட் கிடைப்பதால், மீதமுள்ளவர் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடப்பாண்டு முதல் தாவரவியல் புதிய பாடபிரிவும், ஆங்கில வழியில், பி.காம். பி.எஸ்.சி., பி.காம், பி.பி.ஏ., ஆகிய பிரிவுகளில் ஆறு பாடப்பிரிவு வகுப்புகள் ஷிப்ட்-1, ஷிப்ட்2 முறையில் நடத்தி கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதியதாக, 7 பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதனால், ஏழு பாடப்பிரிவுகளில் மட்டும் 262 மாணவர்கள் கூடுதலாக சேரும் வாய்ப்பு உள்ளது. இனி வரும் கல்வியாண்டில், மொத்தம் 948 மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் சேரலாம். கல்லுாரியில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடப்பதால் மாணவர்கள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பேராசியர்கள் பற்றாக்குறை

திருத்தணி அரசு கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகளில் மொத்தம், 104 பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது, 27 நிரந்தர பேராசிரியர்கள், 44 கவுர விரிவுரையாளர்கள் என மொத்தம், 71 பேர் பணிபுரிந்து வருகின்றனர். போதிய பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கல்வி கேள்வி குறியாக உள்ளது.திருத்தணி அரசு கல்லுாரியில், பி.எஸ்.சி., கணினிஅறிவியல், பி.சி.ஏ., ஆகிய இரு துறைகளில், துறை தலைவர்களே இல்லை. மேலும் இந்த துறைகளில் நிரந்தர பேராசிரியர்களும் இல்லாததால் கவுர விரிவுரையார்களே பணியாற்றி வருகின்றனர்.

Advertisement