பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு பரங்கிப்பேட்டை அருகே பரபரப்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே, பா.ஜ., சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், அவர் காயமின்றி தப்பினார்.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் அஸ்கர் அலிகான், 53; பா.ஜ., சிறுபான்மை பிரிவு கடலுார் மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார்.

இவர், நேற்றிரவு 7:00 மணியளவில், வீட்டில் இருந்து அருகில் உள்ள இ- சேவை மையத்திற்கு பைக்கில் புறப்பட தயாரானார்.

அப்போது, அவரை மர்ம நபர்கள் ஏர்கன் மூலமாக சுட்டனர். அதில், அவர் காயமின்றி தப்பினார். அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் உடைந்து சேதமானது. பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த டி.எஸ்.பி., (பொறுப்பு) விஜிகுமார் தலைமையில் பரங்கிப்பேட்டை போலீசார், சிறப்பு புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடத்தை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, சம்பவம் நடந்த வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமிராவின் ஹார்டு டிஸ்க் மற்றும் அஸ்கர் அலியிடம் இருந்து மொபைல் போன் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள 'சி.சி.டி.வி.,' கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தகவலறிந்த எஸ்.பி., ஜெயக்குமார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, பா.ஜ., நிர்வாகி அஸ்கர் அலிகான் வீட்டில் பா.ஜ., வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement