கடைகளை நாளைக்குள் காலி செய்ய கெடு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக நாளை (மே 17) க்குள் தற்போதைய கடைகளை காலி செய்து நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் கடைகள் இடிக்கப்படும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் அரசு மருத்துவமனை ரோட்டில் சுகாதார வளாகம், லாட்ஜ் உட்பட 40-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இவற்றை இடித்துவிட்டு கலைஞர் நகர்ப்புற கடைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3.25 கோடியில் வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று மாலை நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் பஸ் ஸ்டாண்டில் மைக் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், நாளை (மே 17)க்குள் கடைகளை காலி செய்து நகராட்சியில் ஒப்படைக்க வேண்டும். தவறினால் ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, திங்கட்கிழமை கடைகள் இடிக்கப்படுமென கூறப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் இத்திடீர் அறிவிப்பால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: கடைகளை அகற்றுவது தொடர்பாக கடந்தாண்டு அக்டோபரில் நடந்த வியாபாரிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஜனவரி மாதம் வரை அவகாசம் கேட்டனர். தற்போது ஏப்ரல் மாதம் முடிந்துவிட்டது. இக் கட்டடம் கட்டுவதற்கான நிதியில் கட்டடம் கட்டாவிட்டால் நிதி திரும்ப செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெண்டர் விடும் பணிகள் துவங்க வேண்டியதுள்ளதால் கடைகளை காலி செய்து ஒப்படைக்க கூறியுள்ளோம், என்றார்.

Advertisement