ஏர்வாடியில் சந்தன கூடு விழாவிற்காக கையால் சந்தனம் அரைப்பது தீவிரம்

கீழக்கரை: ஏர்வாடியில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்காக தொடர்ந்து 21 நாட்களுக்கு சந்தனம் கைகளால் தேய்த்து சந்தனம் அரைக்கும் பணி நடக்கிறது.

ஏர்வாடியில் அல்குல்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர்.

சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஏப்.,29 மாலை மவுலீதுடன் விழா துவங்கியது. மே 9ல் கொடியேற்றம் நடந்தது. சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு முதல் தரம் வாய்ந்த சந்தன கட்டைகளை சத்தியமங்கலம் அரசு சந்தன கோடவுன்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 20 கிலோ சந்தன கட்டைகள் வாங்கப்பட்டு உயர்தர பன்னீரில் ஊற வைக்கப்படுகிறது.

அவற்றை சந்தனம் அரைக்கும் கூடத்தில் வைத்து 20 கற்களில் வைத்து தோய்த்தெடுக்கின்றனர். சேகரிக்கக் கூடிய சந்தனத்தை வெள்ளிக் குடங்களில் பாதுகாப்பாக வைக்கின்றனர். பல நுாற்றாண்டுகளாக நடந்து வரும் சந்தனம் அரைக்கும் பணியை ஏர்வாடி ஹக்தார்கள் மற்றும் யாத்ரீகர்கள் தொடர்ந்து 21 நாட்களுக்கு காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை சந்தன கட்டைகளை தேய்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து மே 21, மாலை சந்தனக்கூடு விழாவை துவங்கி மறுநாள் மே 22, அதிகாலையில் அரைத்தெடுக்கப்பட்ட சந்தனத்தை புனித மக்பராவில் பூசி, வண்ண போர்வைகள் போர்த்தப்பட்டு மல்லிகைச் சரங்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.

Advertisement