அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'

ஆவுடையார்கோவில் : பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்தார். மேலும், 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் வேளாணியை சேர்ந்தவர் சத்தியராஜ், 36; 'டாடா ஏஸ்' டிரைவர். இவரது மூன்றாவது மகன் தேவதர்ஷனின் முதல் பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இதில், சிக்கன், மட்டன், முட்டை என, தடபுடலாக அசைவ விருந்து நடந்தது. இதை, 60க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுள்ளனர். இதில், சிலருக்கு நள்ளிரவில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வேளாணியை சேர்ந்த கருப்பையா, 60, என்பவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதில், 28 பேர் ஏம்பல், அறந்தாங்கி மற்றும் சூரக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். ஏம்பல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement