கருவேல மரங்கள் சூழ்ந்த கண்மாய் சேதமடைந்த மடை பராமரிக்கப்படுமா
காரைக்குடி: சாக்கோட்டையில் கருவேல மரங்கள் சூழ்ந்த கண்மாய்கள், சேதமடைந்த கலுங்குகள், மடைகளை, மழைக்காலத்திற்கு முன்பு பராமரிக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 121 கண்மாய்கள் உள்ளன. சாக்கோட்டை யூனியனில் 300க்கும் மேற்பட்ட கண்மாய்களும், 375 ஊருணிகளும் உள்ளன. கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.மாவட்டத்தின் பல பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பியது. ஆனால், சாக்கோட்டை வட்டாரத்தில் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி அழிந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
களத்துாரைச் சேர்ந்த தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் பாலமுருகன் கூறுகையில்: சாக்கோட்டை பகுதியில் யூனியன் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்கள் உள்ளன. கடந்த ஆண்டு, மழைக்காலத்திற்கு முன்பு கண்மாய்களை தூர்வாரவும், மடைகளை பராமரிக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சில கண்மாய்கள் மட்டுமே தூர்வாரப்பட்டது. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தும், தண்ணீர் வீணானது.
இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டாவது மழைக்காலத்திற்கு முன்பு கண்மாய்களை மராமத்து செய்து, மடைகள் கலுங்குகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.