விரையும் வாகனங்களை தடுக்கும் 'டோல்கேட்' எதற்கு

மதுரை: மதுரை ரிங்ரோடு தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் அமைப்பு மூலம் பராமரிக்கப்படுகிறது. இதில் வலையங்குளம் டோல்கேட்டில் வாகனங்கள் செல்லும்போது, சில லேன்களில் தடுப்புகள் (பேரியர்) உடனே செயல்படுவதில்லை. விமான நிலையம், துாத்துக்குடி ரோடு, கப்பலுார் செல்லும் பகுதி என இப்பகுதியில் வாகனங்கள் அதிகளவில் வருகின்றன.

'டோல்கேட்டில்' பாஸ்டேக்கில் பதிவானாலும், 'தடுப்புகள்' தானாக செயல்பட தாமதமாவதால் வாகன ஓட்டிகள் ஒலியெழுப்பத் துவங்குகின்றனர். இந்நிலை பலமாதங்களாக நீடிக்கிறது. ரிங்ரோடு, நான்கு வழிச்சாலைகள் விரைவு வாகனங்களுக்காகவே அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் அதில் அமையும் டோல்கேட்களும் அதற்கேற்ப தொழில்நுட்பத்துடன் அமைய வேண்டியது அவசியம்.

இதுகுறித்து பொது மேலாளர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ''இது கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் 24 மணி நேரமும் செயல்படக் கூடியது. இந்த 'பேரியர்' மீது ஏதாவது ஒருவாகனம் மோதியிருந்தால் தானாக மேலெழும்புவதில் பிரச்னை ஏற்பட்டுவிடுகிறது. அதனை மீண்டும் மீண்டும் சரிசெய்கிறோம்.

இந்தப் பிரச்னை தற்காலிகமானதுதான். இது சாப்ட்வேரில் இயங்குகிறது. இதனை புதிதாகத்தான் மாற்ற வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்கிறோம். விரைவில் சரியாகிவிடும்'' என்றார்.

Advertisement