ஊரக வேலை உறுதி திட்டத்தில் மீண்டும் பணியால் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளாக பதிவு செய்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இத்திட்டம் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஊராட்சிகளில் இத்திட்டம் மூலம் நீர்வரத்து வாய்க்கால், குளம், கண்மாய் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பராமரித்தல் உட்பட பல பணிகள் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு முடிக்கப்படுகிறது.
பணிகள் செய்த பயனாளிகளுக்கு சம்பளம் கணக்கிடப்பட்டு வாரந்தோறும் வழங்கப்படுகிறது. இத் திட்டத்திற்கு அரசின் நிதி கடந்த சில மாதங்களாக வழங்காமல் நிலுவை இருந்தது.
தொழிலாளர்கள் சம்பளம் பெற முடியாமல் சிரமத்தில் இருந்தனர். ஒவ்வொரு பயனாளிக்கும் சராசரியாக ரூ.5 முதல் 10 ஆயிரம் வரை நிலுவை தொகை இருந்ததால் புதிய பணிகள் தேர்வு செய்வதை ஊராட்சி நிர்வாகங்கள் தவிர்த்து வந்தன. திட்டத்தில் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பயனாளிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
சமீபத்தில் மத்திய அரசு மூலம் இத்திட்டத்தில் நிலுவையாக இருந்த தொகை விடுவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே பணிகள் செய்த பயனாளிகளுக்கு நிலுவைத் தொகை முழுவதும் சில நாட்களில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த பணம் முழுவதும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஆக இருந்த சம்பளம் ஏப்ரல் முதல் ரூ.331 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊராட்சிகள் மூலம் புதிய பணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், பயனாளிகள் தொடர்ந்து வேலை வாய்ப்பு பெறுகின்றனர். தற்போது கிராமங்களில் விவசாய பணிகள் மந்தமான நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பலருக்கும் கை கொடுத்துள்ளது என்றனர்.
மேலும்
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு