பழங்குடியினருக்கு பருவமழைக்கு முன் வீடுகள் கட்டப்படுமா - கானல் நீராகிப் போன வாக்குறுதி

கூடலுார்: பளியன்குடியில் பழங்குடியினர் வசிக்க புது வீடுகள் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் கட்டித் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பழங்குடியின மக்கள் உள்ளனர்.

கூடலுார் நகராட்சி லோயர்கேம்பில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பளியன்குடி.

வனப்பகுதியில் அமைந்துள்ள இங்கு 53 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வனப் பகுதிக்குள் சென்று தேன் எடுப்பது பிரதான தொழிலாக இருந்தாலும், மலை அடிவாரப் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அரசு வீடு கட்டி கொடுத்தது.

ஆனால் பராமரிப்பின்றி ஒவ்வொரு ஆண்டும் பெய்த கனமழையால் வீடுகள் முழுவதும் சேதம் அடைந்தது. சில வீடுகள் கூரை பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் வீடு கட்டித்தர அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்கள் கண்டிப்பாக வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.

வெற்றி பெற்றபின் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.

கானல் நீராகிப்போன இந்த வாக்குறுதியால் பழங்குடியின மக்கள் புலம்பி வருவதுடன் மழை காலங்களில் இரவு நேரங்களில் துாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் பளியன்குடியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் 53 வீடுகள் உடனடியாக கட்டித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி தீவிரமடைவதற்கு முன் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பழங்குடியின மக்கள் உள்ளனர்.

Advertisement