இ---நாம் திட்டத்தில் 4588 டன் விளைபொருட்கள் விற்பனை: தேனி விற்பனைகுழு செயலாளர் தகவல்

தேனி:மாவட்டத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டம்(இ நாம்) மூலம் கடந்த ஓராண்டில் மக்காச்சோளம், தக்காளி, பூண்டு, பருத்தி, பீட்ரூட், தேங்காய் உள்ளிட்ட 4588 டன் வேளாண் விளை பொருட்கள் ரூ.7.05 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேனி விற்பனை குழு செயலாளர் ராஜா தெரிவித்தார்.

மாவட்டத்தில் தேனி, போடி, கம்பம், சின்னமனுார், ஆண்டிபட்டி தங்கம்மாள்புரம், பெரியகுளம் கெங்குவார்பட்டி ஆகிய இடங்களில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை குழு மூலம் குடோன்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து உரிய விலைக்கு விற்பனை செய்யலாம். விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களின் விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் வசதி உள்ளது. இந்த கூடங்கள், அங்குள்ள திட்டங்கள் பற்றி தேனி விற்பனை குழு செயலாளர் கூறியதாவது:

வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் பற்றி



வேளாண் விற்பனை கூடம் அரசின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு விவசாயிகளின் வேளாண் பொருட்கள் நேரடியாக அல்லது மறைமுக ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையில் விவசாயிகளிடம் எந்த ஒரு தொகையும் வசூலிப்பதில்லை. உதாரணமாக கமிஷன், சாக்கு எடை, இடைத்தரகர்கள் பிரச்னை இல்லை. ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை விவசாயிகள் வைத்திருந்து விற்பனை செய்ய வாய்ப்பு வழங்குகிறது.

இந்த மையம் மூலம் எப்படி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது



விவசாயிகள் தங்கள் பொருட்களை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வருகின்றனர். அந்த பொருட்களுக்கு குவியல் எண் வழங்கப்பட்டு குடோன்களில் வைக்கப்படுகிறது.

அங்கு பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, இ-நாம் தளத்தில் பதிவேற்றப்படுகிறது. இந்த தளத்தில் நடைபெறும் ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். அதில் கூடுதல் விலைக்கு கேட்பவருக்கு பொருட்கள் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். விற்பனை செய்ததற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 48 மணிநேரத்தில் வரவு வைக்கப்படுகிறது. இதில் பண்ணை வாயில் வர்த்தக முறையில் வீட்டில் இருந்தே விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும். இதற்கு விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

எந்தெந்த பொருட்களை விற்பனை செய்யலாம்



வேளாண் விளை பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்யலாம். மாவட்டத்தில் மக்காச்சோளம், கம்பு, சோளம், வாழை, கொள்ளு, பூசணி, பீட்ரூட், மொச்சை, நெல், முருங்கை, தேங்காய், கொப்பரை, புடலை, மாங்காய், இஞ்சி, பூண்டு, பருத்தி, கம்பு, தக்காளி, வெங்காயம், முந்திரி, குதிரைவாலி ஆகிய 35 விளைபொருட்கள் கடந்த ஒரு ஆண்டில் 4588 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.7.05 கோடி ஆகும். இதனால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவற்றில் அதிகபட்சமாக வாழை 1736 டன், மக்காச்சோளம் 1100 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இ-நாம் தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது



விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர், மேற்பார்வையாளரிடம் தங்கள் பெயர், அலைபேசி எண், ஆதார் விபரங்கள், வங்கி கணக்கு புத்தக நகல் வழங்கி பதிவு செய்யலாம். அல்லது பொருட்கள் விற்பனை செய்யும் போது பதிவு செய்யலாம். விற்பனை செய்யும் தங்கள் பொருட்களுக்கு குறைந்தபட்ச விற்பனை விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்யலாம். அந்த தொகைக்கு கீழ் யாரும் ஏலம் கேட்க முடியாது.

வியாபாரிகள் எவ்வாறு பதிவு செய்வது



சிறுதானிய வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பதிவு செய்திருப்பார்கள். இ நாம் ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் ஒற்றை உரிமம் எடுக்க வேண்டும். பின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை அணுகி ஆதார், உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்து தங்களுக்கான ஐ.டி., முகவரி பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏலத்திற்கு வரும் பொருட்கள், அவற்றின் விலை நிலவரம் உள்ளிட்டவை தெரிந்து கொள்ளலாம். எங்கிருந்து வேண்டுமானலும் வாங்கலாம்.

கோடவுன்கள் கொள்ளளவு பற்றி



மாவட்டத்தில் 12 கோடவுன்கள் உள்ளன. இவற்றின் கொள்ளவு 12,500 மெட்ரிக் டன் ஆகும். விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத போது விவசாயிகள் பொருட்கள் இங்கு வைத்துக்கொள்ளலாம். பொருட்களை முதல் 15 நாட்கள் இலவசமாக வைத்துக்கொள்ளலாம். அதன் பின் 6 மாதங்களுக்கு மெட்ரிக் டன்னிற்கு ரூ. 2.50 வீதம் வாடகை செலுத்த வேண்டும். இதற்கிடையில் பொருளுக்கு உரிய விலை கிடைத்து விற்பனை செய்யலாம்.

பொருளீட்டு கடன் வழங்குகிறீர்களா



இருப்பு வைக்கும் பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கோடவுன்களில் வைத்து கடன் பெறலாம். விளை பொருட்களில் மதிப்பில் 50 முதல் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 33 விவசாயிகளுக்கு ரூ.1.25 கோடி பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.

குளிர்பதன கோடவுன்கள் பற்றி



ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் மாவட்டத்தில் தேனி, கம்பம், சின்னமனுார், வெள்ளயைம்மாள் புரம் ஆகிய இடங்களில் சுமார் 605 டன் கொள்ளளவு மதிப்பில் குளிர்பதன கிடங்குகள் செயல்படுகின்றன. இந்த கிடங்குகள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் செயல்படுகின்றன. இந்த கோடவுன்களில் பதப்படுத்தப்படும் வாழை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்தாண்டு 8ஆயிரம் டன் வரை ஏற்றுமதி செய்துள்ளனர்.

விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறீர்களா



வேளாண் வணிகத்துறையில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்கள் தினமும் கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இது தவிர கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர்களுக்கு தலா 8 கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் குறைதீர் கூட்டங்கள், சிறப்பு முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

விவசாயிகள் இ நாம் முறையில் பொருட்களை விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நேரடியாக அணுகலாம். பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. மேலும் விபரங்களுக்கு 90432 85710 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement