82 மொபைல் போன் திருட்டு நிர்வாண திருடன் கைது

பெங்களூரு:பெங்களூரில், நிர்வாணமாக கடைக்குள் நுழைந்து, 85 மொபைல் போன்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு, ஹொங்கசந்திரா அருகில் தினேஷ் என்பவர், 'ஹனுமான் டெலிகாம் மொபைல் ஷாப்' என்ற மொபைல் போன் கடை நடத்துகிறார். கடந்த 9ம் தேதி இரவு, கடையை பூட்டிவிட்டு சென்றார்.

தினேஷ், இரண்டு நாட்கள் வெளியூர் சென்றிருந்தார். இரண்டு நாட்களுக்கு பின் காலை கடையின் பூட்டை திறந்து, அவர் உள்ளே சென்ற போது பொருட்கள் சிதறி கிடந்தன. மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிந்தது. சுவற்றில் துளை போடப்பட்டிருந்தது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, முகத்தில் மாஸ்க் அணிந்து, நிர்வாணமாக உள்ளே நுழைந்த நபர், 85 மொபைல் போன்களை திருடியது தெரிந்தது.

பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பல கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், இக்ரம் உல் ஹசன், 30, என்பவரை நேற்று கைது செய்தனர். அசாமை சேர்ந்த இவர், ஆறு மாதங்களுக்கு முன் பெங்களூரு வந்து, சென்ட்ரல் மாலில் வேலை செய்தார்.

அதிகமாக பணம் சம்பாதிக்கும் ஆசையில், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. தினேஷின் கடையில் திருட பல நாட்களாகவே திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று அங்கு வந்த அவர் கனமான இரும்பு கம்பியால், சுவற்றில் துளை போட்டுள்ளார்.

'உடை அணிந்து வந்தால், கண்காணிப்பு கேமராவில் பதிவாகும். அதை வைத்து கண்டுபிடிப்பர்' என பயந்து, உடைகளை கழற்றி, வெளியே வைத்து விட்டு ஓட்டை வழியாக உள்ளே நுழைந்து, மொபைல் போன்களை திருடியது தெரியவந்தது.

அவரிடம் இருந்து, 80 மொபைல் போன்களை மீட்டனர். மீத போன்களை எங்கு விற்றார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement