வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு; நுாறு போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல்

மதுரை : மதுரை மாவட்டம் மேலுாரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் அலுவலகங்களில் போலீசார் நடத்திய சோதனையில் நுாற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு, மாவட்ட போலீசாருடன் இணைந்து மேலுாரில் சட்டவிரோத ஆட்சேர்ப்பு ஏஜென்டுகள், வளாகங்களில் நேற்று சோதனை நடத்தியது. அதில் நுாற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் விசாரணையில் மாநிலத்திலேயே சட்டவிரோத ஆட்சேர்ப்பு ஏஜென்டுகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மேலுாரும் ஒன்று என்பது தெரிந்தது.

தமிழகம், புதுச்சேரி மண்டல வெளியுறவுத்துறை அதிகாரி ராஜ்குமார் கூறியதாவது: வெளிநாடுகளில் வேலை தேடுவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியுறவு அமைச்சக உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு ஏஜன்டுகள் மூலம் செல்ல வேண்டும். எந்தவொரு நிதி உறுதி மொழிகளையும் எடுப்பதற்கு முன் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு ஏஜன்டுகள் பட்டியலை emigrate.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம். இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு சட்டவிரோத ஏஜன்டுகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத ஆட்சேர்ப்பு குறித்து 90421 49222ல் புகார் அளிக்கலாம் என்றார்.

Advertisement