மின்வாரியத்தில் களப்பணியாளர் பற்றாக்குறையால் மன உளைச்சல்; புதிய நியமனம் எப்போது என எதிர்பார்ப்பு

மதுரை : தமிழக மின்வாரியத்தில் அடிப்படை பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளர் பற்றாக்குறையால் பராமரிப்பு உட்பட கட்டமைப்புகளை கவனிக்கும் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

கோடை துவங்கிய பின் மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே அடிக்கடி மின்தடை, மின்வினியோக பாதிப்பு நிகழ்கிறது.

அதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் உடனடியாக தீர்வு கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே பிரச்னை ஏற்படுகிறது.

இப்பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம் பணியாளர் பற்றாக்குறையே என்பதே மின்வாரிய ஊழியர்களின் வாதம்.

இதுகுறித்து விசாரித்தபோது, வாரியத்தில் களப்பணியாளர்கள் பணியிடங்கள் பெருமளவு காலியாக இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மின்வாரிய காலியிடங்கள்



மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: இத்துறையில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 208. இப்பணியிடங்களில் 80 ஆயிரத்து 874 பணியிடங்களில்தான் ஆட்கள் உள்ளனர். மீதியுள்ள 61,334 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இவர்களிலும் ஒயர் மேன் 11 ஆயிரத்து 70, ஹெல்பர் 3239, ஒயர்மேன்/ஹெ ல்பர் 858, வணிக உதவியாளர் 2499 பணியிடங்களில் ஆட்கள் உள்ளனர்.

இவை தவிர மொத்தமாக 38 ஆயிரத்து 970 பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

இதனால் மின்வாரியத்தில் குழிதோண்டுவது, மின்கம்பம் நடுதல், மின்னிணைப்பு வழங்கல், விரிவாக்கப்பகுதிக்கு மின்பாதை அமைத்தல், பராமரிப்பு உட்பட அடிப்படை பணிகளுக்கு ஆட்களே இல்லை. ஒரு அலுவலகத்தில் 7 ஒயர்மேன், 7 ஹெல்பர்கள் இருக்க வேண்டும்.

ஆனால் ஒயர்மேன் ஒருவர்கூட இல்லை. கேங்மேன்கள் 2 பேர்தான் உள்ளனர். இதனால் மின்தடை புகார்களை உடனே கவனிக்க முடியவில்லை.

மனஉளைச்சலில் பணியாளர்



இதனால் கேங்மேன்களே சமாளிக்கின்றனர். இவர்கள் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்ல. களப்பணியாளர் இல்லாத நிலையில் பணிப்பளுவால், பலரும் மனஉளைச்சலுடன் உள்ளனர்.

இதுதவிர மின்வாரியத்தில் புதுஇணைப்புக்கு மின்மீட்டர்கள் வழங்குவதிலும் ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டி உள்ளது. வாரியத்தலைவர் உத்தரவிட்டும், அயற்பணியாக வேறு அலுவலகங்களுக்கு பணியாளரை அனுப்புவது தொடர்கிறது.

பல ஆண்டுகளாக பணியாளர் நியமனம் இல்லாததால் பணிப்பளு தொடர்கிறது.

அ.தி.மு.க., ஆட்சியின்போது 10 ஆயிரம் கேங்மேன்களை நியமித்தனர்.

அதன்பின் காலியிடங்கள் அதிகரிப்பால் புதிய நியமனம் எப்போது நடக்குமோ என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement