அழகிகள் காலை கழுவிய பெண்கள்: தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்

6

ஹைதராபாத்: தெலுங்கானாவில், உலக அழகிப் போட்டிக்காக வந்துள்ள பெண்களின் கால்களை, உள்ளூர் பெண்கள் கழுவியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், விருந்தோம்பல் என தெலுங்கானா அரசு விளக்கம் அளித்துள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 31ம் தேதி, 'மிஸ் வேர்ல்டு' எனப்படும் உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, 100க்கும் மேற்பட்ட அழகிகள், தெலுங்கானா வந்துள்ளனர். அவர்களை மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

கடும் கண்டனம்



அதன்படி, 'யுனெஸ்கோ'வால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட, தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் பலம்பேட்டில் இருக்கும் ருத்ரேஸ்வரா எனப்படும் ராமப்பா கோவிலுக்கு, அழகிகள் சென்றனர்.

அங்கு, அவர்களை வரிசையாக அமர வைத்து, அவர்களின் கால்களை உள்ளூர் பெண்கள், தண்ணீர் ஊற்றி கழுவி விட்டனர். அதிலும் சிலரது கால்களை துண்டால் உள்ளூர் பெண்கள் துடைத்தனர்.

இந்த செயலுக்கு, தெலுங்கானா எதிர்க்கட்சிகளான பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மரியாதை



இதற்கு, தெலுங்கானா காங்., அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'விருந்தினர்களை கடவுளாக பாவிக்கும் கொள்கையின்படி, நாம் பின்பற்றும் பாரம்பரிய நடைமுறை தான் இது.

'இதன் வாயிலாக, நம் சர்வதேச விருந்தினர்களுக்கு மிக உயர்ந்த மரியாதையை வழங்கி இருக்கிறோம்' என தெரிவித்துள்ளது.

Advertisement