சாய தொழிற்சாலை டேங்க் வெடித்து கடலுாரில் ஓடியது கழிவுநீர் வெள்ளம்; 30 பேர் மயக்கம்; 20 வீடுகள் சேதம்

கடலுார் : கடலுார் சிப்காட் தொழிற்பேட்டையில், 'லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ்' என்ற சாய தொழிற்சாலையில், 280க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

இங்கு, ரசாயனம் கலந்த கழிவுநீர், 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை இந்த டேங்க் திடீரென வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறியது.

அதிலிருந்து வெளியேறிய கழிவுநீர், அருகில் உள்ள குடிகாடு கிராமத்தில் புகுந்ததால் வீடுகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமானது. ரசாயன கழிவுநீர் கிராம சாலைகளில் வழிந்தோடி வீடுகளுக்குள் புகுந்தது.

கழிவுநீர் ஊருக்குள் புகுந்ததால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், சுனாமி வந்துவிட்டதாக அலறியடித்து ஓடினர். வீடுகளில் பாய்ந்த கழிவுநீரால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாயம் கலந்த ரசாயன தண்ணீரால் அப்பகுதி முழுதும் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது.

தொழிற்சாலை நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; பாதுகாப்பான முறையில் தொழிற்சாலையை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாலை, 4:30 மணிக்கு சிதம்பரம் - கடலுார் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தார் மகேஷ், முதுநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது.

தொடர்ந்து, வீடுகளில் பாய்ந்த கழிவுநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் பல பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. பல லட்சம் ரூபாய் மதிப்பலான பொருட்கள் மாயமாகின. எஸ்.பி., ஜெயக்குமார் விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement