அரசு மருத்துவமனையில் நோயாளி கால் விரல்களை பதம் பார்த்த எலி

மூணாறு : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியை எலி கடித்தது மற்ற நோயாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடிமாலி அருகே கம்பளிகண்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷாஜன் 45. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் கால் அறுவை சிகிச்சைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனையில் ஏப்.,28ல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் வார்ட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன் தினம் இரவு அவரது இரண்டு கால் பெருவிரல்களை எலி கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டது.

அச்சம்பவம் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வார்ட்டில் உள்ள ஜன்னல்கள் உடைந்து உள்ளதால் அதன் வழியாக எலி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை ஊழியர்கள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement