கள்ளப்படகில் இலங்கைக்கு தப்பிச்சென்ற கள்ளகாதலன், காதலியுடன் 2 பேர் சிக்கினர்

ராமேஸ்வரம் : நாகையில் இருந்து கள்ளப்படகில் இலங்கை சென்ற கள்ளகாதலன், கள்ளகாதலி உள்ளிட்ட 4 பேரை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர்.

இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர் சுதாகர் 44. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த வேறு ஒருவரின் மனைவியை காதலித்து அவருடன் அகதியாக 2014ல் தனுஷ்கோடி வந்தார்.

இருவரும் ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் தங்கி இருந்தனர். இந்நிலையில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்கு திரும்புவதால் மீண்டும் இலங்கை செல்ல சுதாகர் முடிவு செய்தார்.

இதனிடையே மண்டபம் முகாமில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விதவை ரோசாந்தி 35, அவரது மகள்கள் நதுர்சிகா 15, தவதாரணி 12, தங்கி உள்ளனர். இதில் ரோசாந்திக்கும் சுதாகருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. மீண்டும் இலங்கை செல்ல நேற்று முன்தினம் நாகை வேதாரண்யம் கடற்கரைக்கு சுதாகர், ரோசாந்தி, இரு மகள்கள் வந்தனர்.

அங்கிருந்து நாட்டுப்படகில் கள்ளத்தனமாக இலங்கை சென்ற போது அந்நாட்டு கடற்படையினர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மண்டபம் முகாமில் வசித்த அகதிகள் தடையின்றி இலங்கை சென்ற சம்பவம் கடல் வழி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Advertisement