நெல் அறுவடை இயந்திரம் விற்று தருவதாக ரூ.21 லட்சம் மோசடி; விற்பனை ஏஜன்சி உரிமையாளர் கைது

தேனி : தேனி அருகே விவசாயியிடம் நெல் அறுவடை இயந்திர வாகனத்தை விற்று தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்த மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த ஏஜன்சி உரிமையாளர் தவக்கல்உசேனை 49, அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

தேனி வடபுதுப்பட்டி சுப்பிரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி கோபால் 50. மதுரை சோழவந்தானைச் சேர்ந்த தவக்கல் உசேன் அன்னஞ்சியில் மில்ட்ரி கேன்டீன் அருகே வேளாண் உழவுக் கருவிகள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் ஏஜன்சியை நடத்தி வந்தார்.

இந்நிலையில் விவசாயி கோபாலிடம் ரூ.21 லட்சம் பெற்று, நெல் அறுவடை செய்யும் இயந்திரத்துடன் கூடிய வாகனத்தை சலுகை விலைக்கு தவக்கல் உசேன் வாங்கித் தந்தார். பின் அதனை குடும்ப சூழ்நிலையின் காரணமாக விவசாயி கோபால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தவக்கல் உசேன் அறுவடை இயந்திரத்தை வேறு நபருக்கு விற்று தருவதாக கூறி வாகனத்தையும் ஓட்டி சென்றார். வாகனத்திற்கான ரூ.21 லட்சத்தை கேட்டதற்கு தராமல் காலம் தாழ்த்தி, அறுவடை இயந்திரத்தையும் வழங்காமல் மோசடி செய்தார்.

கோபால் அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். தவக்கல் உசேனை இன்ஸ்பெக்டர் இளவரசு மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement