மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு

சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் மேட்டமலையில் ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் தலைமையில் வருவாய் அதிகாரிகள் தர ஆய்வு செய்தனர்.

மேட்டமலை ஊராட்சியில் செல்லியார அம்மன் கோயில் அருகே புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. 15 வது நிதிக்குழு மானிய நிதி ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்ட போர்வெல்லுடன் கூடிய மேல்நிலை தொட்டி கட்டி திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே தொட்டியில் விரிசல் விழுந்து தண்ணீர் கசிய துவங்கியது. அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அரசு கட்டட பொறியாளர், வருவாய்த்துறையினர் தர கட்டுப்பாட்டுக்கான சூப்பர் விசிட் என்ற பெயரில் மேல்நிலை குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டதற்கான ஆவணங்களை விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.

Advertisement