மனைவியின் முறை தவறிய உறவால் மூவரை வெட்டி கொன்ற கணவர் கைது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அடுத்த புதுகுடியனுாரை சேர்ந்தவர் விவசாயி பாலு, 30. இவரது காதல் மனைவி, வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையை சேர்ந்த புவனேஸ்வரி, 26. இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. பாலுவின் சித்தப்பா அண்ணாமலை, 52, சித்தி ராஜேஸ்வரி, 45, இவர்களது மகன் விஜய், 26.

புவனேஸ்வரிக்கும், விஜய்க்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை பாலு கண்டித்ததால், புவனேஸ்வரி, தன் தாய் வீட்டில் ஓராண்டாக வசித்து வந்தார். விஜய்யுடன் ஏற்பட்ட தொடர்பால், புவனேஸ்வரி எட்டு மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலு, நேற்று முன்தினம் நள்ளிரவு, மனைவியை கொலை செய்ய, மாமியார் பாரதி, 46, வீட்டிற்கு சென்றார்.

அவரை கண்டதும், புவனேஸ்வரி தப்பி ஓடினார். ஆத்திரத்தில் பாலு, பாரதியை அரிவாளால் வெட்டிக் கொன்றார். தொடர்ந்து, விஜய்யை கொல்ல அவரது வீட்டிற்கு சென்றார்.

அங்கு விஜய் இல்லாத நிலையில், அவரின் பெற்றோர் அண்ணாமலை, ராஜேஸ்வரியை வெட்டிக் கொன்ற பாலு, வாலாஜா போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மனைவியின் தகாத உறவால், மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement