பூப்பறிக்க சென்ற 25 பெண்கள் வேன் கவிழ்ந்ததில் படுகாயம்

தேன்கனிக்கோட்டை : பூப்பறிக்கும் பணிக்கு அழைத்துச் சென்றபோது, வேன் கவிழ்ந்த விபத்தில், 25 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உரிகம், கோட்டையூர், தாண்டியம் மலை கிராமங்களை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட பெண்கள், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை அருகே ஒம்மாண்டப்பள்ளியில், பூப்பறிக்கும் பணிக்காக 'பிக்கப்' வாகனத்தில் நேற்று காலை அழைத்துச் செல்லப்பட்டனர்.

தாண்டியத்தை சேர்ந்த நாகேஷ், 25, வாகனத்தை ஓட்டினார். குந்துக்கோட்டை அருகே, பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த, 25 பெண்கள் படுகாயமடைந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோட்டையூரை சேர்ந்த வெங்கடம்மா, 50, தாண்டியத்தை சேர்ந்த புட்டிபாய், 50, மேல் சிகிச்சைக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement