பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

6

மதுரை: பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தேரூர் பேரூராட்சி தலைவி அமுதராணியின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவியாக இருப்பவர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அமுதராணி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மேலும், அவரது மகளுக்கு கிறிஸ்தவர் (பிற்படுத்தப்பட்டோர்) என ஜாதிச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.


இப்படியிருக்கையில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, பட்டியலினத்தவருக்கு (பொது) ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இது சட்டப்படி தவறு என்று குற்றச்சாட்டு எழுந்தது.


மேலும், அமுதராணிக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.


அதில், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அமுதராணியின் வெற்றி செல்லாது. கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து, பின்னர் பட்டியலினத்தவர் எனக் கூறி அரசின் பலன்களை அனுபவிப்பது குற்றம். அரசியல் கட்சியின் பகடைக்காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறி, தேர்தல் ஜனநாயகத்தையே கேலி கூத்தாக்குகின்றனர் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement