சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: டில்லியில் வங்கதேசத்தினர் 13 பேர் கைது

புதுடில்லி: டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, டில்லியில் அவுச்சாண்டி கிராமத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக குடியேறிய, வங்கதேசத்தினர் 13 பேரை அடையாளம் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, முகமது ரபிகுல் (50), கோதேசா பேகம் (41), முகமது அனோவர் ஹுசைன் (37), முகமது அமினுல் இஸ்லாம் (28), ஜோரினா பேகம் (27), அஃப்ரோசா காதுன் (25), முகமது காகோன் (20), ஹஸ்னா (19) மற்றும் சிறார்கள் 5 பேர் என மொத்தம் 13 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் போலீசாரிடம் வங்கதேச நாட்டவர்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்தியாவில் தங்குவதற்கு எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்து உள்ளனர். இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளனர்.
இந்தியா-வங்கதேச எல்லைக்கு பஸ்சில் பயணம் செய்து, வேலி அமைக்கப்படாத விவசாய நிலங்கள் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


