பாகிஸ்தானை ஆதரித்ததால் வந்த வினை: அஜர்பைஜான், துருக்கியுடன் உறவை முறிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவிப்பு

9

புதுடில்லி: பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.


பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை துருக்கி அளித்தது அம்பலமாகி உள்ளது.

பாக்., ராணுவம் நம் மீது ஏவிய ட்ரோன்களில், துருக்கி நாட்டின், 'அசிஸ்கார்டு சோங்கர்' வகை ட்ரோன்கள் இருந்ததை, நம் ராணுவ கர்னல் சோபியா குரேஷி உறுதிபடுத்தினார்.


இந்நிலையில் இன்று (மே 16) பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இன்று, 24க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் டில்லியில் கூடி இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுத்தனர்.


இது குறித்து, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
துருக்கி மற்றும் அஜர்பைஜானுடனான அனைத்து வர்த்தகத்தையும், முடிவுக்குக் கொண்டுவர இன்று வர்த்தக கூட்டமைப்பின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காரணம் தெளிவாக உள்ளது. துருக்கி மற்றும் அஜர்பைஜான் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தன. துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்தவொரு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியும் நடக்காது.


இந்திய திரைப்படத் துறையும் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் தங்கள் படங்களைப் படமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. துருக்கி, அஜர்பைஜான் நாட்டிற்கு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

Advertisement