பள்ளி மாணவ, மாணவியரை பாதுகாக்க நிரந்தர உளவியல் ஆலோசகர் வேண்டும்; அரசு பாராமுகம்

3

கோவை: தமிழகத்தில், பள்ளி மாணவியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு பள்ளிக்கும் நிரந்தர உளவியல் ஆலோசகர் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இன்றைய சமுதாயத்தில், பள்ளிக்குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து விட்டன. அதனால், மாணவர்களின் நலனுக்காக, இதற்கு முன் செயல்பட்ட நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும்; இதற்காக வாங்கப்பட்டு, தற்போது பயனின்றி நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக, உளவியல் மற்றும் பாலின சமத்துவ வகுப்புகள் உள்ளன. நேரமின்மை காரணமாக பல ஆசிரியர்கள் அவ்வகுப்புகளை தவிர்க்கிறார்கள். நிரந்தர உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டால், இணைய வழி தவறுகள், போதை பழக்கம் மற்றும் பாலியல் பிரச்னைகள் போன்றவற்றில் இருந்து, மாணவர்களை பாதுகாக்க முடியும்' என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு உளவியல் சங்கத் தலைவர் பாலமுருகன் கூறுகையில், ''அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே கல்வி பெறுகிறார்கள்.

அவர்களின் குடும்ப சூழ்நிலைகள், சமூகப் பிரச்னைகள் மற்றும் அவற்றால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள், மாணவர்கள் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் முழு நேர உளவியல் ஆலோசகர்கள் நியமிக்க வேண்டும். இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு, ஏற்கனவே பலமுறை கொண்டு சென்றுள்ளோம்; இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.

Advertisement