பா.ம.க.,வில் நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு? ராமதாஸுக்கு 13/216 அன்புமணிக்கு 203/216

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தை, கட்சித் தலைவர் அன்புமணி மற்றும் 90 சதவீத நிர்வாகிகள் புறக்கணித்தது, அக்கட்சியின் உச்சகட்ட குழப்பத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன் பேரன் முகுந்தன் பரசுராமனை, கட்சியின் இளைஞர் அணித் தலைவராக நியமித்தார். இதனால், அதிருப்தி அடைந்த அன்புமணி, சென்னை பனையூரில் தனி அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
கடந்த 11ம் தேதி, மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில் ராமதாஸ் பேசும்போது, 'பா.ம.க.,வில் நான் எடுப்பது தான் முடிவு; கிழவனுக்கு வயசாகிடுச்சுன்னு சொல்லி ஏமாத்தப் பார்க்காதீங்க. என் முடிவை ஏற்காதவர்களை பதவியிலிருந்து நீக்கி விடுவேன்' என்றார்.
புறக்கணிப்பு
பா.ம.க.,வின் அரசியல் எதிரிகளை எதிர்க்க வேண்டிய ராமதாஸ், பெற்ற மகனை எதிர்த்து அரசியல் செய்வதாக, அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். மாமல்லபுரம் மாநாட்டிற்காக உழைத்த நிர்வாகிகளுக்கு, திருப்போரூரில் விருந்து வைத்து, அன்புமணி பாராட்டினார். இதில், ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
அதைத் தொடர்ந்து, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு, பா.ம.க., மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டியிருந்தார். பா.ம.க., தலைவர் அன்புமணி, 108 மாவட்டத் தலைவர்கள், 108 மாவட்டச் செயலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இவர்களில், 13 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர்களில் ஏழு பேர், மா.செ.,க்களில் ஆறு பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.
பா.ம.க.,வின் ஐந்து எம்.எல்.ஏ.,க்களில், கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் அவருடைய ஆதரவாளர்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேஸ்வரன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தை, 90 சதவீதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் புறக்கணித்ததால், அக்கட்சிக்குள் நிலவும் உச்சகட்ட குழப்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வேலை களைப்பு
கூட்டத்தில் பங்கேற்க வந்த நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, ''இக்கூட்டம் திட்டமிட்டே நடத்தப்படுகிறது. அடுத்தடுத்து வன்னியர் சங்கம், மகளிரணி, மாணவரணி, பசுமை தாயகம் என அனைத்து அணி அமைப்புகளின் கூட்டம் நடக்க உள்ளது.
திருவிடந்தையில் நடந்த பிரமாண்டமான மாநாட்டில், 10 லட்சம் பேர் கலந்துகொண்டனர். அடுத்தகட்டமாக, மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில், 50 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்க உள்ளோம்,'' என்றார்.
கூட்டத்திற்கு, 'கட்சியின் தலைவரான அன்புமணியே வரவில்லையே?' என நிருபர்கள் கேட்டதும், ''அவர் வந்து கொண்டிருக்கலாம்; கூட்டத்துக்கு வரச்சொல்லி, முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
விடாத நிருபர்கள், 'கூட்டத்துக்கு, கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் வரவில்லை; நடவடிக்கை உண்டா?' என கேட்க, ''சமீபத்தில் தான் திருவிடந்தையில் பிரமாண்டமான மாநாடு நடத்தி முடித்திருக்கிறோம். அதற்காக பலரும் உழைத்தனர். அவர்கள் வேலை களைப்பில் இருக்கலாம்; அதனால், மாநாட்டுக்கு வர முடியாமல் போயிருக்கலாம்.
கூட்டத்துக்கு வராத நிர்வாகிகள், அதற்கான காரணம் கூறிவிட்டனர். அதனால், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை,'' என்றார் ராமதாஸ்.
பஜனை கோஷ்டி
அடுத்ததாக, 'கட்சியில் உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் கோஷ்டி பூசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே' என நிருபர்கள் கேட்டதும், சற்று கோபமான ராமதாஸ், ''பா.ம.க.,வில் கோஷ்டி பூசல் கிடையாது. மார்கழி மாதத்தில் தான் பஜனை கோஷ்டி உண்டு.
''எனக்குத் தெரிந்த முதியவர் சுப்பிரமணிய அய்யர், 'சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது' என்றார்.
நான் அவரிடம், சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லை; சீற்றம் அதிகமாகத்தான் இருக்கும் என்றேன். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற சீற்றம் தான் அதிகமாகி உள்ளது. 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். வரும் 2026 சட்டசபை தேர்தலில், பா.ம.க., கூட்டணி நிச்சயம் வெல்லும்,'' என்றார்.
இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமித்தது; பா.ம.க., தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டது போன்ற முடிவில் ராமதாஸ் பிடிவாதமாக இருக்கிறார்.
குடும்பத்தில் இருந்து வேறொருவர் கட்சிக்குள் வந்தால், இரண்டு அதிகார மையங்கள் உருவாகிவிடும். கட்சி தன் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். குடும்ப பிரச்னையை கட்சிக்குள் கொண்டு வரக்கூடாது என்பதில் அன்புமணி பிடிவாதமாக இருக்கிறார். இதனால், கட்சிக்குள் குழப்பம் பெரிதாகிக் கொண்டே செல்வதாக பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை உண்டா?
இதற்கிடையில், 90 சதவீத நிர்வாகிகள் அன்புமணி பக்கம் இருப்பது உறுதியாகியுள்ளதால், ராமதாஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார்; பொதுக்குழுவை கூட்டுவாரா; வேறு ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் பா.ம.க.,வினர் உள்ளனர்.
அதேபோல, தன்னை புறக்கணித்து விட்டு, தனியாக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டிய ராமதாசுக்கு, கட்சியில் பலம் இல்லை என்று தெரிந்துகொண்ட அன்புமணி, அப்பா மீதே ஏதும் நடவடிக்கை எடுப்பாரா என்றும் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியோடு நடக்கப்போவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
மாவட்டச் செயலர்கள் கூட்ட அறிவிப்பை, 'பேஸ்புக்' பக்கத்தில் ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதில், 'உழைத்தது போதும்... ஓய்வெடுங்கள் ஐயா; அன்புமணியிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு, ஓய்வு பெறுவது நல்லது; இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் ஐயா' என, பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
-- நமது நிருபர் -

மேலும்
-
வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: சொல்கிறார் டிரம்ப்!
-
அமலாக்கத்துறை ரெய்டு: தொழிலதிபர் 'எஸ்கேப்'?
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
சென்னையில் 2 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை
-
500 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது