500 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே, 500 கிலோ குட்கா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து விழுப்புரத்திற்கு காரில் குட்கா கடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து, எஸ்.பி.,சரவணன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று காலை திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற 'ஸ்கார்பியோ' காரை நிறுத்த முயன்றனர்.

உடன் அந்த கார், போலீசாரை கண்டதும் திரும்பி, திருக்கோவிலுார் மார்க்கமாக வேகமாக சென்றது. இதுகுறித்து காணை மற்றும் அரகண்ட நல்லுார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அரகண்டநல்லுார் போலீஸ் நிலையம் எதிரில், இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் உள்ளிட்ட போலீசார் காரை மறித்தனர். ஆனால் கார் அங்கு நிற்காமல், திரும்பி விழுப்புரம் மார்க்கமாக சென்றது.

வடகரைதாழனூர் கூட்டு சாலையில் விரைந்த அந்த கார் மீது, எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்த லியோ சார்லஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தங்களது வாகனத்தை மோதி, காரை நிறுத்தினர்.

உடன் கார் டிரைவர் உள்ளிட்ட இருவர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். காரில், 500 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜாலூர் மாவட்டம், சாசோ ஜாலுாரை சேர்ந்த பவுன்மாராம் மகன் ஜாம்தாராம், 24; முக்காராம் மகன் மணீஷ் 20; என்பதும், 50 மூட்டைகளில் 500 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது.

அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும் கார், குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement