பா.ஜ., வலிமையான கட்சி; காங்கிரஸ் சிதம்பரம் 'பளீச்'

புதுடில்லி : ''இண்டி கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை,'' என கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், ''பா.ஜ., போன்ற வலிமையான கட்சியை பார்த்தது இல்லை,'' என்றார்.

டில்லியில், காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருத்யுஞ்சய் சிங் யாதவ் ஆகியோர் எழுதிய, 'கன்டஸ்டிங் டெமாக்ரடிக் டெபிசிட்' என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

இதில் பங்கேற்று, காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிதம்பரம் பேசியதாவது:

மிருத்யுஞ்சய் சிங் யாதவ் கூறுவது போல், 'இண்டி' கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை. கூட்டணி இன்னும் அப்படியே இருப்பதாக அவர் நினைக்கிறார். ஆனால், எனக்கு அப்படி தெரியவில்லை. இது பற்றி, கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் இருந்த சல்மான் குர்ஷித் பதிலளிக்கலாம். இண்டி கூட்டணி ஒற்றுமையாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், கூட்டணி பலகீனமாக உள்ளது. கூட்டணியை பலப்படுத்த நமக்கு நிறைய நேரம் இருக்கிறது.

என் அனுபவத்தில், வரலாற்றை படித்ததில், பா.ஜ.,வை போல இவ்வளவு வலிமையான கட்சியை பார்த்தது இல்லை. அனைத்து துறைகளிலும் அக்கட்சி வலிமையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சிதம்பரத்தின் இந்த பேச்சு, தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவரது பேச்சு தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் பிரதீப் பண்டாரி, 'பா.ஜ., ஒரு வலிமையான அமைப்பு. காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது, ராகுலுக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்களுக்கு கூட தெரிந்துள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement