இம்மாத இறுதியில் நிறைவடையும் படப்பிடிப்பு; அரசியல் சுற்றுப்பயணம் துவங்கும் விஜய்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இம்மாத இறுதிக்குள், 1.30 லட்சம் நிர்வாகிகள் நியமிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க., கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகளில், கவனம் செலுத்தி வருகிறார்.
கட்சியில் அமைப்பு ரீதியாக, 120 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுதும் உள்ள, 67,000 ஓட்டுச்சாவடிகளுக்கு ஏஜன்டுகளை நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட, ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கு, மண்டல வாரியாக இரண்டு நாள் பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மண்டல முகாம், சமீபத்தில் நடந்து முடிந்தது. காஞ்சிபுரத்தில், சென்னை மண்டல ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கான முகாம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதுமட்டுமின்றி, கட்சிக்கு அமைப்பு ரீதியாக 63,000 நிர்வாகிகளை நியமிக்க, விஜய் முடிவெடுத்துள்ளார். இம்மாத இறுதிக்குள் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து, கட்சி தலைமைக்கு பட்டியல் அனுப்ப வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் இன்று நடக்க உள்ளது. இதற்கிடையில், தன் கடைசி படமான ஜனநாயகன் சூட்டிங்கில் இருக்கும் நடிகர் விஜய்க்கு, இம்மாத கடைசியோடு படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைய உள்ளது.
இதையடுத்து, அடுத்த மாதம் முதல் தீவிரமாக அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கும் விஜய், வரும் ஆகஸ்ட் முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று கட்சியினரையும் மக்களையும் சந்திக்க முடிவெடுத்துள்ளார்.
இதற்கான பயண திட்டங்களை கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும்
-
வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: சொல்கிறார் டிரம்ப்!
-
அமலாக்கத்துறை ரெய்டு: தொழிலதிபர் 'எஸ்கேப்'?
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
சென்னையில் 2 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை
-
500 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது