தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!

சென்னை: பீஹார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஜியா குமாரி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழில் 93 மதிப்பெண் எடுத்து அசத்தி உள்ளார். அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
சென்னை அடுத்த கவுல் பஜார் அரசு பள்ளியில் படித்த மாணவி ஜியா குமாரி, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் அவர், 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர், பீஹார் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான கூலித்தொழிலாளியின் மகள்.
இவர் அம்மா, அப்பா மற்றும் இரண்டு சகோதரிகள் உடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது தந்தை கட்டுமான தொழிலாளி. அவர் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கிறார். ஜியாவைப் போலவே, அவரது மூத்த சகோதரி ரியா குமாரி 12ம் வகுப்பு படிக்கிறார். அவரது தங்கை சுப்ரியா குமாரி 9ம் வகுப்பு படிக்கிறார். இவர்களும் சரளமாக தமிழ் பேசுகிறார்கள்.
17 ஆண்டுகளுக்கு முன்..!
இது குறித்து சாதனை படைத்த மாணவி ஜியா கூறியதாவது: எனது தந்தை 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான வேலைக்காக சென்னைக்கு குடிபெயர்ந்தார். பின்னர் தமிழகத்தில் அரசு பள்ளிகள் நன்றாக இருப்பதை உணர்ந்தோம். எனது அம்மா, இரண்டு சகோதரிகள் மற்றும் நான் சென்னைக்கு வந்தோம். அரசு பள்ளிகளில் இலவச கல்வி மற்றும் உணவு எங்களது குடும்பத்திற்கு உதவியாக இருந்தது.
எனது தந்தை கூலி வேலை செய்கிறார். அவரால் தனியார் பள்ளியில் பணம் செலுத்தி படிக்க வைக்க முடியாது. தமிழ் நிச்சயமாக ஹிந்தியை விடக் கடினமாக இருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதும், அது எளிதாகிவிடும். இங்குள்ள அனைவரும் தமிழ் மட்டுமே பேசினர், நான் அவர்களுடன் பேசி தமிழை கற்றுக்கொண்டேன்.
தமிழ் படிப்பேன்!
நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ, அங்கு பேசப்படும் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது சமூகத்துடன் எளிதாகப் பழகவும் உதவுகிறது. நான் டாக்டர் ஆக விரும்புகிறேன். பள்ளியில் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடுவதன் மூலம் தான் தமிழைக் கற்றுக்கொண்டேன்.
வகுப்புகளில் தொடர்ந்து தமிழ் படிப்பேன். எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ் தான் எளிதான பாடமாக இருந்தது. நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பேசியும், எழுதியும் வருகிறேன். 11,12ம் வகுப்புகளில் தொடர்ந்து தமிழ் படிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
தந்தை, ஆசிரியர் பாராட்டு
''எனது மூன்று குழந்தைகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தனது மகள் அதிக மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது'' என ஜியாவின் தந்தை தனஞ்சய் திவாரி தெரிவித்தார்.
ஜியாவின் உச்சரிப்பும், சரளமாகத் தமிழ் பேசுவதும், ஒரு தாய்மொழி பேசுபவரின் புலமையைப் போலவே சிறந்தது. அவர் தமிழ் பேசுவதைக் கேட்டு யாரும் பீஹாரைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடியாது என ஜியாவின் தமிழ் ஆசிரியர் தெரிவித்தார். தமிழில் 93 மதிப்பெண் எடுத்து அசத்திய பீஹார் மாணவியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.














மேலும்
-
பாகிஸ்தான் அனுப்பிய 600 ட்ரோன்கள் வீழ்த்திய இந்தியா: வெளியான புதுத் தகவல்
-
சென்னை சாலையில் திடீர் பள்ளம்; கார் கவிழ்ந்து விபத்து
-
தொழிலதிபர் வழக்கை தீர்க்க ரூ.2 கோடி லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி மீது வழக்கு
-
நாளை விண்ணில் பாய தயார் நிலையில் பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்; இஸ்ரோ அறிவிப்பு
-
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்; 3 பேர் மீட்பு: 5 பேரை தேடும் பணி தீவிரம்
-
ஜம்மு காஷ்மீரில் எஸ்.ஐ.ஏ., அதிகாரிகள் ரெய்டு; ஸ்லீப்பர் செல்களை ஒழிக்க நடவடிக்கை