பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை

3

விழுப்புரம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவர் இடையேயான பிரச்னையை தீர்க்கும் விதமாக அவர்களை சந்திக்க வைக்கும் முயற்சிகள் நடப்பதாக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறி உள்ளார்.


@1brபா.ம.க.,வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து முரண் நிலவி வருகிறது. இவர்களின் இந்த பூசலின் ஒருபகுதியாக தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்ட தலைவர், செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.


இந்நிலையில், 2வது நாளாக தைலாபுரத்தில் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாநில மகளிரணித் தலைவர் சுஜாதா உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். பா.ம.க., மகளிர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் கவுரி, செயலாளர் வீரா ஆகியோரும் வந்தனர்.


ஆனால் 2வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்த கட்சியின் கவுரவத் தலைவர் ஜி. கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது;


தமிழகத்தில் பா.ம.க, வன்னியர் சங்கம் ஒரு வலிமையான அமைப்பு. ஒரு கட்சி என்றால் உட்கட்சியில் சின்ன சலசலப்பு வருவது என்பது இயல்புதான். இது எல்லா கட்சிகளிலும் இல்லாமல் இல்லை.


அப்படி பா.ம.க.,வில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. நான் அதை மறைத்து பேச விரும்பவில்லை. பா.ம.க., என்பது ஒரு குடும்ப பாசத்தோடு இருக்கும் கட்சி. சின்ன நெருக்கடி ஏற்பட்டால் அது மிக விரைவில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். சுமூகமான தீர்வு மிக விரைவில் வரவேண்டும் என்பது எங்களின் நோக்கம். அதற்கான தீவிர முயற்சிகளை எடுக்கிறோம். இருவரும் விரைவில் ஒன்றாக சந்திப்பார்கள், பேசுவார்கள்.


சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இருவரும் சந்தித்து பேசுவார்கள். நல்ல கூட்டணியில் இணைவார்கள். பா.ம.க., இடம்பெற்றுள்ள கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற பழைய நிலையை பா.ம.க.,உருவாக்கி காட்டும்.


இவ்வாறு ஜி.கே. மணி கூறினார்.

Advertisement