பெயருக்கு மட்டுமே நகராட்சி: -வளர்ச்சி பணிகளில் வீழ்ச்சி

பந்தலுார் : நெல்லியாளம் பேரூராட்சி நகராட்சியாக மாறிய பின்பும், போதிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த, 1967ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி நெல்லியாளம் பேரூராட்சி உருவானது. தொடர்ந்து, கடந்த, 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதுடன், கடந்த 2010ம் ஆண்டு முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளதுடன், 61 ஆயிரம் மக்கள் தொகையும் உள்ளது.

தாலுகா தலைநகரான பந்தலுார் பஜாரில், நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதுடன், இதன் தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் பதவி வகித்து வருகிறார்.

தி.மு.க.,வினர் பெரும்பான்மை கொண்ட இந்த நகராட்சியில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் முனைப்பு காட்டுவதில்லை.

மாறாக தங்களுக்குள் உள்ள ஈகோவால் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும், தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

பயன்படுத்த முடியாத நடைபாதை



பந்தலுார் பஜாரில், 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை, மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு உயரமாகவும், பாதியில் விட்டுள்ளதுடன், பெரும்பாலான கடைக்காரர்களின் பொருட்கள் வைக்கும் இடமாகவும் மாறி உள்ளது.

வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால், சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதுடன், சாலை ஓரங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கி உள்ளது. இதனால், சிறிய குக்கிராமம் போல் பந்தலூர் பஜார் காணப்படுகிறது.

இந்த வழியாக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வதுடன், தமிழக, கேரளா அரசு பஸ்களும் தினசரி வந்து செல்கின்றன.

குடிநீர், சாலை, நடைபாதை என எந்த வசதிகளும் மேற்கொள்ளாமல், பெயருக்கு மட்டுமே இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருவதுடன், அனைத்து வரியினங்கள் மட்டும் உயர்ந்துள்ளன.

ஆக்கிரமிப்பில் வருவாய் நிலம்



பந்தலுார் பஜாரின் மைய பகுதியில், வருவாய் துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கி, கட்டடங்களாக மாறியுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றி அந்த பகுதியில் 'பார்க்கிங்' பகுதி மற்றும் திருமண மண்டபம், சாலையோர வியாபாரிகளுக்கான கடை அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும், அதிகாரிகள் மவுனம் காட்டி வருவது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், ''நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அலட்சியம் கட்டி வருகின்றனர்.

பந்தலுார் பஜார் பகுதியை முழுமையாக சீரமைத்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement