'கல்வியில் வட மாவட்டங்கள் பின்தங்க அரசே காரணம்': அன்புமணி

9

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில், வட மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கி வருவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அரியலுார், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், முதல் 15 இடங்களில் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

ஆனால், கடைசி 10 இடங்களில், வேலுார், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்துார் என, எட்டு வட மாவட்டங்கள் இருப்பது கவலை அளிக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இதேநிலை தான் நீடிக்கிறது. வட மாவட்ட அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது; கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மக்களின் சமூக, பொருளாதார காரணிகளும் தேர்ச்சி குறைய காரணமாகின்றன.

தமிழக அரசுக்கு உண்மையாகவே சமூக நீதி பார்வை இருந்திருந்தால், இப்பிரச்னைக்கு எளிதில் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால், மாற்றாந்தாய் வட மாவட்டங்களுக்கு, கல்வித்துறையில் எப்போது விடியல் ஏற்படும் என்பது தெரியவில்லை.

வட மாவட்டங்கள் கல்வியில் முன்னேறாவிட்டால், ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது. இதை தமிழக அரசு உணர்ந்து, வட மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement