கருணாநிதி ஆட்சியில் மினி பஸ் இயக்கியோருக்கு வாழ்வு கிடைக்குமா?

1


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், மினி பஸ் இயக்கியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், அவர்களுக்கான வழித்தடத்தை நீட்டித்து, அனுமதி கொடுக்க, தமிழக போக்குவரத்து துறை முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்கிற, கோரிக்கை எழுந்திருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1997ல் மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது, மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. கிராமங்கள் மட்டுமின்றி, நகரை ஒட்டியுள்ள பகுதிகள், நெடுந்துார வீதிகளில் வசிப்பவர்களும், நகர்ப்பகுதிக்கு வந்து செல்ல உபயோகமாக இருந்தது.

வருமானம் இல்லை



நிர்வகிப்பதற்கு போதுமான வருவாய் கிடைக்காத காரணத்தாலும், பொருளாதார ரீதியாக மினி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டதாலும், படிப்படியாக இச்சேவை குறைய ஆரம்பித்தது; தற்போதைய சூழலில் மாநில அளவில் ஆங்காங்கே, ஒரு சில நகரங்களில் மட்டுமே இச்சேவை செயல்பாட்டில் இருக்கிறது.

இச்சூழலில், மினி பஸ் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்து, விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில், போக்குவரத்து துறை இறங்கியுள்ளது; வரும் ஜூன் மாதம் இத்திட்டத்தை துவக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இத்திட்டம், மீண்டும் முடங்காமல் இருக்க, மினி பஸ் உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான கோரிக்கைகளுக்கு, தீர்வு காண வேண்டியது அவசியம்.

ஏனெனில், மினி பஸ் வழித்தடத்தின் அதிகபட்ச துாரம் - 25 கி.மீ., என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வழித்தடத்தின் துாரத்தில், நிர்ணயித்துள்ள கி.மீ., முடிந்திருந்தாலும், அதற்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனைகள் அல்லது முக்கியமான இடங்கள் இருந்தால், அதுவரை அனுமதியை நீட்டித்து வழங்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், வழித்தடங்களின் துாரத்தை இறுதி செய்ய, அரசு துறையினர் ஆய்வுக்கு வரும்போது, அரசு போக்குவரத்து கழகத்தினர் ஆட்சேபம் தெரிவிப்பதால், விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கான நலனை கருத்தில் கொண்டு, அரசாணைப்படி, அனுமதி தர வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கிடப்பில் விண்ணப்பம்



அடுத்ததாக, பழைய மினி பஸ் திட்டத்தில் அனுமதி பெற்றவர்கள், புதிய திட்டத்துக்கு மாறுவதற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து, பழைய அனுமதி சீட்டை சரண் செய்ய வேண்டும். புதிய வழித்தடத்தில், சேவை செய்யாத பாதை துாரம் குறைந்தபட்சம் 1.5 கி.மீ., இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், புதிய வழித்தடங்களுக்கான விண்ணப்பங்கள் மீது மட்டுமே, போக்குவரத்து துறையினர் கவனம் செலுத்துகின்றனர். ஏற்கனவே மினி பஸ் இயக்கியவர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல், கிடப்பில் போடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், பழைய மினி பஸ் திட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலில் அனுமதி கொடுத்து விட்டு, அதன் பிறகே புதியவர்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. மற்ற மாவட்டங்களில் இந்நடைமுறை பின்பற்றப்படவில்லை.

இதற்கு முன், ஒரு வழித்தடத்தில் எத்தனை பஸ்கள் வேண்டுமானாலும் இயக்கலாம் என்கிற நடைமுறை இருந்தது; இப்போது, பொதுமக்கள் பயணத்தை தோராயமாக கணக்கிட்டு, ஒன்று அல்லது இரண்டு பஸ்கள் மட்டும் அனுமதிக்கலாம் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

இதன்படி, 'பர்மிட்' வழங்கப்பட்டு விட்டால், ஏற்கனவே இயக்கியவர்களுக்கு அனுமதி கிடைக்காத சூழல் இருக்கிறது. அதனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்து, இச்சேவையில் ஈடுபட்டுள்ள பழைய மினி பஸ் ஆபரேட்டர்களுக்கு முன்னுரிமை அளித்து, விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்கிற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெளிமாநில பஸ் பதிவு



மினி பஸ்சில் டிரைவர், கண்டக்டர்கள் இருக்கைகள் தவிர்த்து, 25 இருக்கைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 'வீல் பேஸ்' 390 செ.மீ.,க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது, மற்றொரு நிபந்தனை. இத்தொழில் கடந்த காலங்களில் நலிவடைந்த சமயத்தில், மினி பஸ் தயாரிப்பதையே கம்பெனிகள் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டன.

அதனால், இப்போது பழைய பஸ்களும் கிடைப்பதில்லை; புதிய பஸ்களும் கிடைப்பதில்லை. அதனால், கேரளம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து பழைய பஸ்களை வாங்கி வந்து, பயன்படுத்த பலரும் முயற்சிக்கின்றனர்.

அம்மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மினி பஸ்களில், 28 இருக்கைகள் இருக்கின்றன. வட்டார போக்குவரத்து துறை அதிகாரியோ அல்லது கலெக்டரோ ஆய்வு செய்து, ஒரு இருக்கையை அகற்றி விட்டு, அந்த பஸ்களை பயன்படுத்த அனுமதி அளிக்கலாம். ஆனால், வெளிமாநில பஸ்களை பதிவு செய்யாமல், தாமதித்து வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, 'வீல் பேஸ்' 390 செ.மீ., என்பதை, 420 செ.மீ., என, உயர்த்திக் கொடுத்தால், புதிய பஸ்கள் வாங்கி பயன்படுத்த முடியும். நீளம் அதிகரிப்பதால், ஐந்து இருக்கைகள் கூடும்; இருக்கைகளின் எண்ணிக்கைக்கேற்ப வரி செலுத்துவதால், கூடுதல் இருக்கைக்கேற்ப அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்கிற யோசனையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதி ஆட்சியில், வெற்றிகரமாக செயல்படுத்திய இத்திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்க நினைக்கிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின். அவர், பழைய திட்டத்தில் மினி பஸ் இயக்கியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், வழித்தடத்தை நீட்டித்துக் கொடுத்து, அனுமதி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

கட்டணம் உயர்த்தணும்!

மினி பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:ஒரு வழித்தடத்தில் அதிகபட்சமாக, 10 'டிரிப்' இயக்க முடியும். 25 கி.மீ., வீதம் நாளொன்றுக்கு, 250 கி.மீ., துாரம் இயக்கப்படும். மினி பஸ், அதிகபட்சமாக, லிட்டருக்கு 4-5 கி.மீ., 'மைலேஜ்' கிடைக்கும். டீசல் நிரப்ப, 5,000 ரூபாய்; டிரைவர், கண்டக்டர் சம்பளம் மற்றும் தினப்படி சேர்த்தால், நாளொன்றுக்கு, 7,000 ரூபாய் தேவைப்படும். குறிப்பிட்ட சில 'டிரிப்'புகளுக்கு மட்டுமே கூடுதல் பயணிகள் வருவர் என்பதால், தினமும் இவ்வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பு குறைவு; நஷ்டமே ஏற்படும்.எனவே, குறைந்தபட்ச கட்டணமாக, 10 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் இயக்கும் 'ரெட்' நிற பஸ்சில் கூடுதல் கட்டணம் செலுத்தி, பயணிகள் செல்கின்றனர். மினி பஸ் சேவை, வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கும் என்பதால், இக்கட்டணத்தை மக்கள் ஏற்றுக் கொள்வர்; போக்குவரத்து துறை அனுமதியளித்தால் போதும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.







- நமது நிருபர் -

Advertisement