எத்தனை அடி வாங்கினாலும் பாடம் கற்காத பாகிஸ்தான்; திருப்பூர் பேரணியில் அண்ணாமலை 'காட்டம்'

திருப்பூர் : ''ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி தொல்லை தரும் பாக்., எத்தனை அடி வாங்கினாலும் இன்னும் பாடம் கற்கவில்லை,'' என, அண்ணாமலை பேசினார்.
பாகிஸ்தான் மீது, நம் நாட்டு ராணுவம் நடத்திய 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி, ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்று ஆதரவு தெரிவித்தும், உயிரிழந்த நம் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நேற்று தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.
தியாகி திருப்பூர் குமரன் நினைவிடம் முன் துவங்கி, மாநகராட்சி சந்திப்பு காந்தி சிலை முன் நிறைவடைந்தது. பேரணியை மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில், தேசிய கொடியை ஏந்தியபடியும், ராணுவத்துக்கு ஆதரவான வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டும் பலர் பங்கேற்றனர்.
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய கொடி பேரணியில் பங்கேற்ற, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
இது முற்றிலும் தேசப் பற்றை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. எந்த கட்சி கொடியும், கோஷமோ இல்லாமல், மதம், மொழி சார்ந்து இன்றி, இந்தியன் என்ற ஒரே நிலையில், நடக்கும் நிகழ்ச்சி. எல்லையில் நம்மை காக்கும் விதமாகப் பணியாற்றும் ராணுவத்தினரை பெருமைப்படுத்தும், ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு. இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இதைக் காணும் இள வயதினர் மத்தியில் நாட்டு பணிக்காக, சீருடை பணியில் சேரும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
நம் நாட்டு ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை ஏன், எந்த நிலையில் மேற்கொண்டது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்தின் போது பாக்., பிரிக்கப்பட்டு, பரஸ்பரம் மக்கள் எங்கு வசிக்க விருப்பமோ அங்கு போகலாம் என்று அனுப்பப்பட்ட போதிலிருந்து இப்பிரச்னை துவங்கியது. பாக்., இதுவரை பலமுறை நம் மீது போர் தொடுத்து பெருத்த அடியை வாங்கியும் இது வரையும் பாடம் கற்கவில்லை.
இந்த முறை தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து அப்பாவிகள் உயிரை எடுத்த நிலையில், அடுத்தடுத்து ஒவ்வொரு நிலையாகத் தான் நம் ராணுவம் பதிலடி அளித்தது. நம் நடவடிக்கையை உலக நாடுகள் எதுவுமே தவறு என்று குறை கூறவில்லை. நம்மால் பாகிஸ்தானை எதுவும் செய்ய முடியும் என்று காட்டியிருக்கிறோம். இனிமேல் பாக்., நம் மீது எடுக்கும் நடவடிக்கை எதுவுமே போர் தொடுப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அத்துமீறினால், உலக வரைபடத்திலேயே பாகிஸ்தான் இருக்காது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த முறை அந்த நாட்டின் அப்பாவி மக்களுக்காகத் தான் பிரதமர் இந்த நடவடிக்கையை நிறுத்தியுள்ளார்.
நம் நாடு எப்போதும் போரை விரும்பியதில்லை. பல முறையும் இந்த சூழலை பாக்., தான் ஏற்படுத்தியது. நம் நாட்டில் ஒற்றுமையாக உள்ள மக்கள் மத்தியில் மத மோதலை ஏற்படுத்தும் எண்ணம் தான் இதற்கு காரணம். இது தொடர்ந்தால் அடுத்த தாக்குதல் அந்நாட்டின் இதயப் பகுதியில் நம் ஏவுகணை தாக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!
-
பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!