முதியோருக்காக இயக்கப்படும் பேட்டரி கார் முறையாக இயங்காததால் அவதி

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் முறையாக இயங்காததால் மாற்றுத்திறனாளிகள், முதியோர் பூங்காவை ரசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கண்ணாடிமாளிகை, இத்தாலியன் கார்டன், பெரணி இல்லம், கள்ளிச்செடி மாளிகை, கீழ் தோட்டம், புதிய தோட்டம் உள்ளிட்டவைகள் உள்ளன. ஆண்டுக்கு, 35 சுற்றுலா பயணியர் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். வார நாட்கள் , தொடர் விடுமுறையில் அதிகமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். பிற நாட்களில் கணிசமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

இயங்காத பேட்டரி காரால் அதிருப்தி



பூங்காவுக்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்க்கும் வகையில், பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பயணிக்கு ஒரு நபருக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமீப காலமாக பேட்டரி கார் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கோடை சீசனுக்கு மலர்களை ரசிக்க பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணியர் பேட்டரி கார் இயங்காததால் முதியோரை அழைத்து செல்ல முடியாமல் வாகனத்தில் அமர வைத்தனர்.

தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''பூங்காவை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்காக தான் பேட்டரி கார் இயக்கப்படுகிறது. நல்ல நிலையில் தான் உள்ளது. நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement