நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு: குஜராத் அமைச்சர் மகன் கைது!

ஆமதாபாத்: நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு செய்த புகாரில் குஜராத் வேளாண் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத் கைது செய்யப்பட்டார்.
நுாறு நாள் வேலை திட்டத்திற்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை அமைச்சர் மகனுடைய நிறுவனம் எடுக்காமலே, நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டதிற்கான பொருட்களை அனுப்பாமலேயே அனுப்பியதாகவும், பணிகள் முடிக்கப்பட்டதாகவும் கணக்கு காட்டி பணம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது.
தேவ்கத் பரியா மற்றும் தன்பூர் தாலுகாக்களில் நுாறு நாள் திட்ட செயல்பாட்டில் பெரும் முறைகேடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குனர் பி.எம். படேல் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இந்த ஊழல் வெளிப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தணிக்கையில், இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது,
அமைச்சரின் மகன்கள் பல்வந்த் மற்றும் கிரண் கபாத் ஆகியோரால் நடத்தப்படும் ராஜ் கட்டுமானம் மற்றும் ராஜ் டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் பல்வந்த் சிங் கபாத் இன்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து தாஹோத் துணை எஸ்.பி ஜகதீஷ் பண்டாரி கூறியதாவது:
தான்பூர் மற்றும் தேவ்கத் பரியாவில் நடந்த நுாறு நாள் திட்டத்தில் ஊழல் தொடர்பாக பல்வந்த் கபாத் மற்றும் அப்போதைய தாலுகா மேம்பாட்டு அதிகாரி தர்ஷன் படேல் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
அமைச்சரின் இளைய மகன் கிரண் கபாத் தலைமறைவாக உள்ளார். பல கோடி ரூபாய் மோசடி குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு ஜகதீஷ் பண்டாரி கூறினார்.



